பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராவதற்கு வந்த அத்வானியை சந்தித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வந்த அத்வானி அங்கு செல்வதற்கு முன்னதாக உ.பி. மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை சந்தித்தார். அப்போது ஆதித்யநாத் பூச்செண்டு கொடுத்து அத்வானியை வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது உ.பி.யின் முக்கிய பாஜக பிரமுகர்களும் இருந்தனர்.
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.