புதுடெல்லி : ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றம் எதிரே போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.,க்கள் பாராளுமன்றம் எதிரில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. காங்., துணைத் தலைவர் ராகுல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே, நவநீத கிருஷ்ணன், திருச்சி சிவா, கனிமொழி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.,க்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கரன்சி விவகாரத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று ஒன்று கூடி ஆலோசித்தனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்ள் கலந்து கொண்டனர்.
டெல்லிக்கு புறப்படும் முன்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் பேசும்போது, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறேன். இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்றார்.
இந்நிலையில், இன்று காலை 9.45 மணியளவில் 12 கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் பாராளுமன்றத்தின் எதிரில் உள்ள காந்தி சிலை அருகில் தர்ணா போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று எம்பிக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.