டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து

விவசாயிகள் திட்டமிட்டிருக்கும் ‘டெல்லி சலோ’ பேரணியை முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட், மொத்தமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (பல்க் எஸ்எம்எஸ்), டாங்கிள் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 11:13 AM IST
  • ஹரியானா காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் அம்பாலாவில் பல இடங்களில் தடுப்புகளை அமைத்து வருகின்றன.
  • அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • உயர் அதிகாரிகள் பலர் எல்லைப் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து title=

புது டெல்லி: மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம்!! ஆம், பல வட மாநில விவசாயிகள் ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்காக தயாராகி வருகிறார்கள். பஞ்சாப் விவசாயிகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தங்கள் 'டெல்லி சலோ', அதாவது 'டெல்லி செல்வோம்' பேரணியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஹரியானா காவல் துறையும் பல வித நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அம்பாலா, ஜிந்த் மற்றும் ஃபதேஹாபாத் மாவட்டங்களில் பஞ்சாப்-ஹரியானா எல்லைகளை மூடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள 'டெல்லி சலோ' அணிவகுப்பிற்காக விவசாயிகள் அணிதிரண்டுள்ளனர். தங்களது பல்வேறு குறைகளுக்கு தீர்வு கூற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே அவர்களது நோக்க்கமாக உள்ளது. 

இதற்கிடையில், விவசாயிகள் திட்டமிட்டிருக்கும் ‘டெல்லி சலோ’ பேரணியை முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட், மொத்தமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (பல்க் எஸ்எம்எஸ்), டாங்கிள் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

‘டெல்லி சலோ’ பேரணி

சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், 'டெல்லி சலோ' பேரணியை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

எங்கெல்லாம் மொபைல் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன?

அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா உள்ளிட்ட மாவட்டங்களில் மொபைல், இண்டர்நெட் சேவைகளின் இடைநிறுத்தம் இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குரல் அழைப்புகள் தவிர மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் மொத்த எஸ்எம்எஸ் மற்றும் டாங்கிள் சேவைகளும் இடைநிறுத்தப்படும் என ஹரியானா நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொபைல், இணைய வசதி நிறுத்தத்திற்கான இந்த உத்தரவு பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும். இதற்கிடையில், டெல்லியை நோக்கிய விவசாயிகளின் அணிவகுப்பை முன்னிட்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த் மற்றும் ஃபதேஹாபாத் மாவட்டங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஹரியானாவிலிருந்து பஞ்சாப் வரையிலான முக்கிய வழித்தடங்களில் சாலை போக்குவரத்து தடைபடலாம் என்ற காரணத்தால், ஹரியானா காவல்துறை பொதுமக்களுக்கு போக்குவரத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. பிப்ரவரி 13 அன்று மாநிலத்தின் முக்கிய சாலைகளில் பயணத்தை தவிர்க்குமாறும் காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | டாப் 10 முதல்வர்கள்... நம்பர் 1 இவரா...? ஸ்டாலினுக்கு என்ன இடம் தெரியுமா?

விவசாயிகளின் அணிவகுப்புக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் வகையில், ஹரியானா காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் அம்பாலாவில் பல இடங்களில் தடுப்புகளை அமைத்து வருகின்றன. அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர், காவல் கண்காணிப்பாளர் (அம்பாலா ரேஞ்ச்) சிவாஸ் கவிராஜ் மற்றும் அம்பாலா காவல் கண்காணிப்பாளர் ஜஷந்தீப் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் எல்லைப் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

ஹரியானா (Haryana) மாநிலத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 50 கம்பெனி மத்திய துணை ராணுவப் படைகளை ஹரியானா காவல்துறை பணியமர்த்தியுள்ளது. இது தவிர அரசாங்கம், போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. அனுமதியின்றி பேரணியில் பங்கேற்க வேண்டாம் என்றும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக விவசாயிகள் சங்கங்களும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதிகாரிகள் தங்கள் சகாக்கள் மீது அதிகாரம் அல்லது அடக்குமுறையை பயன்படுத்தினால், தங்கள் போராட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மாநிலங்களின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதும், ஆங்காங்கே காணப்படும் தடுப்புகளும், மொபைல் மற்றும் இணைய சேவைகளின் நிறுத்தமும் இதற்கு முன் நடந்த விவசாய போராட்டத்தை (Farmers Protest) நினைவுபடுத்துகிறது. 

மேலும் படிக்க | Gyanvapi: மதுரா & வாரணாசி மசூதிகளுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்! கோரிக்கையால் வந்த வினை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News