ஒடிசாவில் அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனையை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது...!
ஒடிசா கரையோரப் பகுதியில் அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது. இந்த அதிநவீன இடைமறி ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வளர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது.
சுமார் 8.05 மணியளவில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் (ITR) வீலர் தீவு என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை நடை பெற்றது.
பூமியின் வளிமண்டலத்தில் 50 கி.மீ. உயரத்தில் இலக்குகளை ஈடுபடுத்துவதற்காக இந்த பிருத்வி பாதுகாப்பு வாகனம் (PDV) பணியை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (TRTO) விஞ்ஞானி கூறினார்.
மேலும், இது குறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது... ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.05 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வேறு ஒரு பகுதியில் இருந்து ஓர் ஏவுகணை முதலில் செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணையின் வருகை குறித்து ரேடார் மூலம் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை பிருத்வி பாதுகாப்பு சாதனத்துடன் இணைக்கப்பட்ட கணினி துல்லியமாக கணித்தது. இதன்பின்னர், அந்த கணினியில் இருந்து உத்தரவு வெளியிடப்பட்டதும், பிருத்வி பாதுகாப்பு சாதனத்தில் இருந்து ஏவப்பட்ட இடைமறி ஏவுகணை, நடுவானில் எதிர்ப்பக்கத்தில் இருந்து வந்த ஏவுகணையை தாக்கி அழித்தது.
எதிர் பக்கத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறி ஏவுகணை தாக்கி அழித்த துல்லியத் தன்மையை பல்வேறு நிலையங்களில் இருந்து விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்தனர். இதற்கு முன்பு, இதே ஏவுதளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.