ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது தான்சானியா பயணத்தை முடித்துக்கொண்டு இன்னொரு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடிக்கு கென்யாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்யா அதிபர் உகுரு கென்யாட்டாவை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, 44.95 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான கடன் வரி சலுகை நீட்டிப்பு, ஆப்பிரிக்க நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும் என்று கூறினார். கென்யாவில் இந்தியா புற்றுநோய் மருத்துவமனையை கட்டும், தரம் மற்றும் மலிவு விலையிலான மருத்துவ உதவிகளை வழங்கும் என்றார். இந்தியா மற்றும் கென்யா இடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்தாகி உள்ளது. பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இருநாடுகளும் தங்களுடைய நல்லுறவை வலுப்படுத்த பாதுகாப்பு மற்றும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஆகிய உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கென்யா அதிபர் உகுரு கென்யாட்டாவுடன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி:- “கென்யாட்டா மற்றும் நான் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதமயமாதல் இருநாட்டிற்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் பொதுவான சவால் என்று ஒத்து கொண்டோம். சைபர் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக போரிடுதல் உள்ளிட்டவையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் செய்து உள்ளோம்" என்றார்.
பின்னர் நைரோபியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி சென்றார், அங்கு மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். ”மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கவாதிகளுக்கு யார் பாதுகாப்பான உறைவிடம் வழங்குகிறார்களோ, அவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று வெளிப்படையாக பாகிஸ்தானை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
PM paying tributes to Mahatma Gandhi at @uonbi. pic.twitter.com/jARhNaYcAD
— PMO India (@PMOIndia) July 11, 2016