மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார் -பிரகாஷ் ஜாவடேகர்

Last Updated : Jul 7, 2016, 09:36 AM IST
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார் -பிரகாஷ் ஜாவடேகர் title=

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தார். அப்போது ஸ்மிருதி இரானியிடம் இருந்த மனிதவள மேம்பாட்டுத் துறையை புதிதாக கேபினட்  அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜாவடேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- எனக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது ஸ்மிருதி இரானி பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளார். அந்தப் பணிகளை நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன். மாணவர் போராட்டத்தில் இருந்து உருவானவன் நான். ஆகையால், அனைவருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் அங்கு போராட்டத்துக்கான அவசியம் இருக்காது.கல்வி என்பது மாணவர்களை மையமாக கொண்டதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே கல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருத்தல் கூடாது.புதிய கல்விக் கொள்கை: புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது ஈடுபட்டுள்ளது. கல்வியானது, தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பது அவசியமாகும். நமது கல்வி முறையை புதுமையானதாக நாம் மாற்றியமைக்க வேண்டும். நமது நாட்டின் கல்வித் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

கேபினட் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது குறித்து ஜாவடேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை ஏற்க வேண்டுமெனில், கேபினட் அமைச்சராக இருப்பது அவசியம்; ஆகையால், அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Trending News