ஐ.நா., சபையில் காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசிய நவாஸ்

Last Updated : Sep 22, 2016, 12:58 PM IST
ஐ.நா., சபையில் காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசிய நவாஸ் title=

ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர் பார்த்ததை போல காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுத உதவி அளிக்கின்றன.

பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்து உருவாகவில்லை. பாகிஸ்தானிற்கு வெளியில் இருந்து தான் உருவாகிறது. பயங்கரவாதத்தை பாகிஸ்தானும் எதிர்த்து போரிட்டு தான் வருகிறது.

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாக்., விரும்புகிறது. இந்தியா எங்களுடனான பேச்சுவார்த்தையில் சில நிபந்தனைகள் விதிக்கிறது. அவை ஏற்க கூடியது அல்ல. பேச்சுவார்த்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், இரு நாட்டிற்கும் சாதகமான பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது. அதற்கு சாத்தியமில்லை.

காஷ்மீர் பங்கீட்டிற்கு தீர்வு காணப்படாத வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படாது. காஷ்மீர் மக்கள் மீது இந்தியா நடத்தியுள்ள கொடூர தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை ஐ.நா. விடம் பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

பர்ஹான் வானி இந்திய படைகளால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. பர்ஹான் வானி காஷ்மீர் மக்களின் நினைவு சின்னமாக உள்ளார்.

காஷ்மீர் இந்தியாவில் இருந்து விடுபட வேண்டும். காஷ்மீரில் நடந்த வன்முறைகள் குறித்து சர்வேதச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் காஷ்மீர் கலவரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க முடியும் என நவாஸ் பேசி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டான். இதனால் காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் காஷ்மீரின் யூரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. அதற்க்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News