முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை ‘தலாக்’ கூறும் 'முத்தலாக்' முறைக்கு தடை விதிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள வரைவு மசோதாவுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஒப்புதல் அளித்து உள்ளது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை 'தலாக்' கூறும் 'முத்தலாக்' முறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையால் பாதிப்படைந்த முஸ்லிம் பெண், இம்முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கூறியது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது முத்தலாக் முறை. இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது எனவும், மதம் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது. இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லாத வகையில் பார்லிமென்ட்டில் சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இதனையடுத்து, முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த வரைவு மசோதா குறித்து டிசம்பர் 10-ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த வரைவு மசோதாவுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஒப்புதல் அளித்து உள்ளது.
வரும் 15-ம் தேதி தொடங்கும் பாராளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.