மும்பையை சேர்ந்த மதபோத கர் ஜாகீர் நாயக். அவரது மதபோதனைகள் துபாயை தலைமையிடமாகக் கொண்ட பீஸ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் இந்தியாவில் ஜாகீர் நாயக்கின் மதபோதனையை ஒளிபரப்ப சில நாட்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.
22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. அவரது பேச்சை ஆய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், துபாயில் உள்ள ஜாகீர் நாயக் இன்று மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மும்பை நகரில் சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். மும்பை திரும்பிய பின் ஜாகீர் நாயக்கிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாயக்கின் சொத்துக்கள், நிதி மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தலாம் என தெரிகிறது.