பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், மக்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது!
இன்றைய நாளில் மனம் திரும்பும் மனிதர்களுக்காக தேவன் காத்திருக்கின்றார் என்னும் வசனம் இடம் பெற்றுள்ள செய்திகளை பற்றி பார்போம்!!
ஒரு கிராமத்தில் பெருஞ்செல்வந்தர் ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மைந்தன் தகப்பன் சொல்லை மீறாதப் பிள்ளையாக அவர் சொன்ன சொல்லையே கட்டளையாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
ஆனால், இளைய மகனான அவனுடைய தம்பியோ சோம்பலும், கேளிக்கையுமாக தன் வாழ்நாள்களை வீணாக்கி வந்தான். தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை வீணாக செலவிடுவதுமாக இருந்தான்.
இதனால், அவனுடைய தந்தை பெரும் துயருற்று பெரும் வேதனையில் இருந்தார். இந்நிலையில், ஒரு நாள் தன் நண்பர்கள் கூறிய தீய ஆலோசனைகளைக் கேட்டு, சொத்தில் தனக்கான பங்கைப் பிரித்துத் தரும்படி தந்தையிடம் கேட்டான்.
என்ன செய்வது என்று அறியாத தந்தையும், மகனின் விருப்படி சொத்துகளை பிரித்து கொடுத்தார். இவற்றை எல்லாம் மகிழ்ச்சியுடன் அனுபவித்த அவர் தவறான நட்பினால் வெகுவிரைவிலேயே தனது செல்வங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டான்.
அப்போது பெரும் பஞ்சம் ஒன்று வந்தது. கையில் இருந்தவை எல்லாம் இழந்து வறிய நிலையில் இருந்த அவன் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டான். பிறகு செய்வதறியாது திகைத்தபோது, பசியில் பன்றிகளுக்கு இருந்த தவிட்டைத் தின்றான். அப்போதுதான், தன் தந்தையைப்பற்றி நினைத்துப் பார்த்தான். பிறகு தான் செய்து கொண்டிருந்த பணியிலிருந்து விலகி தனது ஊருக்குப் புறப்பட்டுப் போனான்.
அந்த சமயத்தில் அங்கு விழா ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. அனைவரும் ஆனந்தத்தில் இருந்தனர். ஆனால், அவனுடைய தந்தையோ தன்னுடைய மகனை எதிர்பார்த்து கவலையில் இருந்தார்.
அப்போது, தூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்து அவருடைய தந்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மகனை அன்போடு வரவேற்க இறங்கி ஓடோடி வந்து அவனை அன்போடு அரவணைத்து கொண்டார்.
இப்படித்தான், நம்முடைய ஆண்டவரும் நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் அவற்றை நாம் உணர்ந்து மனம் திருந்தினால் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்ள காத்திருக்கின்றார். ஆனால், செய்த தவற்றை எண்ணி மனம் வருந்தினால் மட்டும் போதாது. மீண்டும், எப்போதும் அந்தத் தவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு கிறிஸ்து.