உப்பில்லா உணவு! ஒப்பிலியப்பன் கோவிலின் மகிமை!

108 திவ்ய தேசங்களில் ஒப்பிலியப்பன் கோவிலில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Last Updated : Jan 27, 2020, 01:51 PM IST
உப்பில்லா உணவு! ஒப்பிலியப்பன் கோவிலின் மகிமை! title=

108 திவ்ய தேசங்களில் ஒப்பிலியப்பன் கோவிலில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு திசை நோக்கி சுமார் 9 அடி உயரத்தில் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீனிவாசன், திருவிண்ணகரப்பன், உப்பிலியப்பன் எனும் திருநாமங்கள் கொண்டும் அழைக்கிறார்கள். 

பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார். 

இத்தலத்தில் நம்மாழ்வார் தனது திருவாய்மொழி (6-3-9) மங்களா சாசனத்தில் தன்னொப் பாரில்லப்பன் என பாடுகிறார். இதனால் தனக்கு ஒப்பார் இல்லாத அப்பன் - ஒப்பில்லா அப்பன் என்பதால் ஒப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.  

இத்தலத்தின் வரலாறு:-

மிருகண்ட மகரிஷியின் புதல்வரான பக்த மார்க்கண்டேயர் இத்தலத்தில் விஷ்ணு பகவானை நோக்கி தவம் இயற்ற துளசி பறிக்க சென்றார். அப்போது அந்த துளசி வனத்தில் ஒரு செடியின் அருகில் சிரித்த வண்ணம் மயக்கும் கயலுடன் வியக்கும் அழகுடன் மழலையாக மலர்ந்த மலராக பூத்திருந்த ஸ்ரீ மகாலட்சுமியை கண்ட மார்க்கண்டேயர் பாசம் பொங்கும் மனதுடன் எடுத்து வளர்த்து வந்தார்.

மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயது முதிர்ந்த அந்தணர் வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திரு வோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் தான் மணமுடிக்க ஸ்ரீமகாலட்சுமி யை பெண் கேட்க மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் உப்பு சேர்க்கக்கூட அறியா வயது.. அப்படி இருக்க எப்படி இது சாத்தியமாகும்? என்று வினவினார்.  

தங்களின் புதல்வி உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகா விஷ்ணு தான் என பின்பு அறிந்து மார்க்கண்டேய மகரிஷி பெருமாளுக்கு தன் பெண்ணை கன்னிகாதானம் செய்துகொடுத்த தலம் இதுவாகும். ஆதலால் இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார். இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தென்னக திருப்பதி என்று ஒப்பிலியப்பன் கோவில் போற்றப்பட்டு வருகிறது. இக்கோவிலில் வருடப்பிறப்பன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோல் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

  

Trending News