சென்னை: மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தனுஷ் படித்த கல்விச் சான்றிதழ்களை தனுஷ் மற்றும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இவ்வழக்கில் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க அவரை இன்று நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜரான தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவர்கள் சரிப்பார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். தம்பதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களுடன் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என கூறி இவ்வழக்கை வருகிற மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.