‘லவ்வர்’ படம் இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை - மணிகண்டன்!

Lover Movie: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி நடித்துள்ள  லவ்வர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 3, 2024, 07:45 AM IST
  • பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் லவ்வர்.
  • மணிகண்டன், கண்ணா ரவி நடித்துள்ளனர்.
  • இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
‘லவ்வர்’ படம் இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை - மணிகண்டன்! title=

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க | Vijay Political Party: ‘2026-ன் முதல்வர் விஜய்’ வைரலாகும் ரசிகர்களின் போஸ்டர்!

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,“ நான் கடந்த வாரம் இந்த படத்தைப் பார்த்தேன். எக்ஸலாண்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பேசப்படும். இந்த படத்தின் டிரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமைக் கொண்டவர்" என்றார். 

நடிகர் கண்ணா ரவி பேசுகையில்,“ குட் நைட் படத்திற்கு ஊடகமும், ரசிகர்களும் ஆதரவளித்ததால் தான் அப்படம் வெற்றிப் பெற்றது. அத்துடன் அந்த படம் நிறைய பொக்கிஷங்களை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘லவ்வர்’ என்ற படமும்  தயாராகியிருக்கிறது. இதுவும் வெற்றிப்படம் தான். தயாரிப்பாளர் யுவராஜிடம் எந்தமாதிரியான படங்களை தயாரிப்பதில் விருப்பம் இருக்கிறது? என கேட்டபோது,  எனக்கு பிடித்த படமாக அமையவேண்டும். அந்த படம் அந்த ஆண்டின் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இடம்பெறவேண்டும். அந்த வகையில் தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘லவ்வர்’ படமும் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த படத்தின் இயக்குநரான பிரபுராம் வியாஸ் மீது தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள்" என்றார்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ் பேசுகையில்,“ 2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி” என்றார். 

நடிகர் மணிகண்டன் பேசுகையில்,“ சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.’ என்றேன். இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர். 

படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர். நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல்  இப்போதும் சொல்கிறேன். ‘இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸாப்பாயின்ட்மென்ட் பண்ணாது.” என்றார்.

மேலும் படிக்க | Squid Game 2: விரைவில் வருகிறது ஸ்குவிட் கேம் சீசன் 2! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News