அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனா, (APY) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு, சந்தாதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ 1000 முதல் ரூ 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்படுகிறது.
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் ரூ.1000 முதல் ரூ.5000 வரை உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மாதம் ரூ.42 முதல் ரூ.1,454 வரை பங்களிக்க வேண்டும்.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம்.
சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு சந்தாதாரரின் மனைவிக்கும் அதே ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்த பின், சந்தாதாரரின் 60 வயது வரை சேர்ந்த ஓய்வூதிய நிதி நாமினிக்கு திருப்பித் தரப்படும்.