சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் ஆர்ஆர் அணியின் பேட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியை வென்றால்தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும்.
2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் துருவ் ஜூரேல் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் சான்ட்னருக்கு பதில் தீக்ஷனா சேர்க்கப்பட்டார். இம்பாக்ட் பிளேயரில் ரஹானே இருந்தாலும் அவர் ஓப்பனிங்கில் இறங்க மாட்டார் என டாஸின் போது ருதுராஜ் கெய்க்வாட் தெரிவத்தார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பவர்பிளே மிகவும் திணறியது. 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 42 ரன்களையே சேர்த்தது. அதன்பின் ஜெய்ஸ்வால் 24, ஜாஸ் பட்லர் 21 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சஞ்சு சாம்சன் - துருவ் ஜூரேல் ஜோடியும் சற்று போராடியது. இருப்பினும் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரேல், ரியான் பராக் உடன் சற்று நிலைத்து விளையாடினார்.
கடைசி ஓவரில் ஜூரேல் 28 ரன்களிலும், சுபம் துபே ரன்னேதும் இன்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை சேர்த்தது.
ராஜஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களை சேர்த்திருந்தார். அவர் 35 பந்துகளில் 3 சிக்ஸர்களையும், 1 பவுண்டரியையும் அடித்திருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் சிமர்ஜித் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
142 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே ஓப்பனர்களான ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா இங்கு களமிறங்கி உள்ளனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சந்தீப் சர்மா, அஸ்வின் ஆகியோரின் ஓவர்கள் மிக முக்கியமானதாகும்.