சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...!

NDA Allies Portfolio Details: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற இலாகாக்களை இங்கு காணலாம்.

  • Jun 10, 2024, 22:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய கட்சிகளாகும். இவை முறையே 16 மற்றும் 12 தொகுதிகள் என 28 இடங்களை கையில் வைத்துள்ளன.

 

1 /8

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் மொத்தம் 72 அமைச்சர்கள் நேற்று பொறுப்பு ஏற்றனர். ராஷ்டிரபதி பவனில் அவர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். (புகைப்படம்: பிரதமர் நரேந்திர மோடி)  

2 /8

இந்த அமைச்சரவையில் பிரதமர் மோடி, 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்பு கொண்ட இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் அடங்குவார்கள். இதில் 11 பேர் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். (புகைப்படம்: அமைச்சரவை கூட்டம்)  

3 /8

அந்த வகையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி உள்ளிட்டவை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் அமைச்சரவையில் பெற்றுள்ள இலாகாக்களை இங்கு காணலாம். (புகைப்படம்: அமைச்சரவை கூட்டம்)  

4 /8

30 கேபினட் அமைச்சர்களில் கூட்டணி கட்சி சேர்ந்த ஐந்து பேருக்கு அதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மதச்சார்பற்ற ஜனதா தளம், மதச்சார்பற்ற இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகியவை தலா 1 இடங்களை பெற்றுள்ளன.  அதுமட்டுமின்றி 36 இணை அமைச்சர்களில் 6 பேர் மட்டுமே கூட்டணி கட்சியினர் ஆவார்.  (புகைப்படம்: சிராக் பஸ்வான்)  

5 /8

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி. குமாரசாமிக்கு கனரக தொழில் துறை, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, லோக் ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: ஹெச்.டி. குமாரசாமி)  

6 /8

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை வைத்துள்ள இரண்டாவது கட்சியாகும். ஆனால் அக்கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் (எ) லாலன் சிங்கிற்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: கிஞ்சராபு ராம் மோகன்)  

7 /8

அதுமட்டுமின்றி 36 இணை அமைச்சர்களில் 6 பேர் மட்டுமே கூட்டணி கட்சியினர் ஆவார். தெலுங்கு தேசம் கட்சி, இந்திய குடியரசு கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அப்னா தளம் ஆகியவை தலா 1 இடத்தை இதில் பெற்றுள்ளன. (புகைப்படம்: அனுப்ரியா படேல்)  

8 /8

கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறையில் தனிப்பொறுப்பு கொண்ட இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இணை அமைச்சராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர சேகர் பெம்மாசானி ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த பிரதாப்ராவ் ஜாதவ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையில் தனிப் பொறுப்பு கொண்ட இணை அமைச்சராகவும், அப்னா தளம் கட்சியின் அனுப்ரியா படேல் உடல்நலம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளனர். (புகைப்படம்: ராம்தாஸ் அத்வாலே)