How Does Divorce Affect Children? பெற்றோர்கள் பலர், குழந்தைகள் பெற்ற பின்பு விவாகரத்து பெற முடிவு செய்கின்றனர். இது, அவர்களின் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
How Does Divorce Affect Children? திருமணம் என்பது, இருவர் மட்டும் தொடங்கும் பந்தம் அல்ல. ஒரு பெரிய குடும்பத்தின் சிறிய தொடக்கம் ஆகும். ஆனால், அனைத்து திருமணங்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. சிலர், குழந்தை பெற்று கொள்வதற்கு முன்னரே சுதாரித்துக்கொண்டு பிரிந்து விடுகின்றனர். ஒரு சிலருக்கு தங்களது பார்ட்னரின் சுய உருவமே குழந்தைகள் பிறந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரிய வருகிறது. இதனால், குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து விடுகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு எந்த வகையிலான பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
சிக்கலான உணர்ச்சிகள்: விவாகரத்தான பெற்றொர்களின் குழந்தைகள் சோகம், கோபம், குழப்பம் மற்றும் பதட்டம் உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிகளை அனுபவிக்கலாம். அவர்கள், “தங்களை யாரேனும் விட்டுவிட்டு போய்விடுவார்களோ..” என்ற பயத்துடன் போராடலாம்.
நடத்தையில் மாற்றங்கள்: சில குழந்தைகளின் குணாதிசயம் பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு மாறலாம். திடீரென கோபப்படுவது, யாருடனும் பேசாமல் இருப்பது போன்றவற்றை செய்யலாம். ஒரு சில குழந்தைகள், படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம்.
சகித்துக்கொள்ளும் திறன்: விவாகரத்து பெறும் குழந்தைகளின் பெற்றோர், பிரிவிற்கு பின்னர் வெவ்வேறு வீடுகளில் தங்கலாம். ஒரு சிலர் குழந்தைகளை நாட்கள் கணக்கில் பிரித்து தங்களது இல்லங்களில் வைத்துக்கொள்வர். இதனால், அவர்கள் பல சமயங்களில் இரண்டு வீடுகளில் தங்குவது போன்று தோன்றும். ஒரு சிலர் ஒரே ஒரு பெற்றோருடன் தங்கும் சூழலுக்கும் தள்ளப்படுவர். இந்த புதிய வாழ்க்கை முறையை அவர்கள் சகித்துக்கொள்ள பல வருடங்கள் தேவைப்படலாம்.
உறவுகளுக்குள் பிரிவு: விவாகரத்து, அந்த குழந்தைக்கு பெற்றோர் இருவருடனான உறவையும் பிரிக்கலாம், அல்லது பாழக்கலாம். அந்த குழந்தை, சண்டையையும் பிரிதலையும் பார்த்து வளர்வதால் உண்மையிலேயே இப்படித்தான் அனைத்து உறவுகளும் இருக்குமோ என அவை நினைத்துக்கொள்ளும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: பெற்றோர் இருவரும் அந்த குழந்தையை சேர்ந்து பார்த்துக்கொள்ளும் போது அதன் வாழ்க்கை முறை வேறாக இருக்கும். ஆனால், பெற்றோர் இருவரும் பிரிகையில் குழந்தைகளின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முதலில், அவர்கள் கேட்கும் பொருள், கேட்கும் நேரத்தில் கிடைத்துவிடும். ஆனால், பிரிவிற்கு பிறகு நிதிநிலையை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படலாம். இது, அந்த குழந்தைகளையும் பாதிக்கலாம்.
சுயமரியாதை: விவாகரத்து பெற்ற பெற்றோர்களின் குழந்தைகள், பல சமயங்களில் தனது பெற்றோரின் பிரிவிற்கு தாங்கள்தான் காரணம் என நினைத்துக்கொள்வர். இதனால் அவர்களின் சுய மரியாதையை அவர்களே குறைத்துக்கொள்ள ஆரம்பித்து விடுவர்.
சமூக சவால்கள்: விவாகரத்து, ஒரு குழந்தையின் சமூக வாழ்க்கையையும் பாதிக்கலாம். தன் வயதை ஒத்த பிள்ளைகளை விட தான் வேறாக இருக்கிறோமே என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும் போது இந்த பிரச்சனைகள் உருவாகிறது.
நீண்ட கால விளைவுகள்: குழந்தைகளே இருக்கும் போது பெற்றோர்கள் பிரிந்து விட்டால் கூட, அவர்கள் வளர்ந்த பின்பும் அதன் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். அதனால், விவாகரத்து பெறும் முன்னர் பெற்றோர் இருவரும் அமர்ந்து, ஏன் விவாகரத்து பெறுகிறீர்கள் என்றும், அதன் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் குழந்தைகளுக்கு பொறுமையாக புரிய வைக்க வேண்டும்.