குழந்தைகளை நல்லவர்களாக மாற்றுவது எப்படி? ‘இதை’ சொல்லிக்கொடுங்கள்!

Parenting Tips Tamil : குழந்தைகளுக்கு, எந்த விஷயம் சொல்லிக்கொடுத்தாலும் அதை அப்படியே பின்பற்றி வளருவர். அப்படி, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? 

Parenting Tips Tamil : குழந்தைகள், பல சமயங்களில் நமக்கே வாழ்க்கை பாடத்தை எளிதாக கற்றுக்கொடுத்துவிட்டு போய் விடுவர். இவர்களின் விளையாட்டுத்தனத்தை பெரியவர்கள் ரசிக்க நேர்ந்தாலும், ஒரு சில முறை இவர்களை நினைத்து, பெற்றோர் கவலைப்படுவதுண்டு. “இப்போதே நம் குழந்தை இப்படி இருக்கிறதே, நம் குழந்தை பிறரிடம் நல்ல பெயரை எடுக்கும் நல்ல மனிதனாக வளருமா...” என்ற குழப்பம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. இது சகஜமான ஒன்றுதான். குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் குறித்தும், அவர்களின் வளர்ப்புமுறை குறித்தும், இங்கு பார்க்கலாம் வாங்க. 

1 /7

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..” என்ற பாடல் வரிகளை பல முறை கேட்டிருப்போம். இது, ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் அவர்கள் வளர வளர, சுற்றி இருக்கும் சூழலும் அவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் மாற்றி விடலாம். இதனால், அவர்கள் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை கற்றுக்கொண்டால் அதற்கு பெற்றோர்கள் பொறுப்பாக இயலாது. இருப்பினும், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சில வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுத்தால் அவர்கள் வளர்கையில் நல்ல மனிதர்களாக உருவாகுவார்கள். அப்படி கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? 

2 /7

பல குழந்தைகளுக்கு, தாங்கள் நினைப்பது கைக்கு கிடைத்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அடம் பிடிக்கவும் செய்வர். அப்படி கேட்டது கிடைக்கவில்லை என்றால் அதனால் சோகமாகி ஏமாற்றமடைவர். அதனால், சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு “கேட்டவை அனைத்தும் கிடைத்து விடாது” என்ற பாடத்தை கற்றுத்தர வேண்டும். இதனால், அவர்களால் தோல்வி பயம் இன்றி வளர முடியும். 

3 /7

குழந்தைகள் பலர், சிறு வயதில் பிறரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வர். அதனால், அவர்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கின்றனரோ அதே போல அவர்களும் பிறரை நடத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். இதனால் அவர்களுக்கு பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும். 

4 /7

ஒரு விஷயத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால், அதற்கான கடின உழைப்பை போட வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால், எந்த சூழல் வந்தாலும் தனக்கு வெற்றி கிட்டும் வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் குழந்தைகளுக்கு உருவாகும். 

5 /7

குழந்தைகள், அவர்களின் செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமாகும். உதாரணத்திற்கு அவர்கள் கையில் வைத்திருக்கும் சாப்பிடும் பொருளை கீழே சிந்தி சாப்பிடுகிறார்கள் என்றால், அதை அவர்களையே சுத்தம் செய்யச்சொல்லி கூற வேண்டும். அடுத்த முறை சாப்பிடும் போது கீழே சிந்திவிட கூடாது என இன்னும் கவனமாக சாப்பிடுவர். இப்படி அனைத்து விஷயத்திலும் அவர்களுக்கு பொறுப்புணர்வை ஊட்டலாம். 

6 /7

குழந்தைகள் சிறுவயதில் ஏதேனும் தவறு செய்தால் அதிலிருந்து தப்பிப்பதற்காக பொய் கூறலாம். இந்த பழக்கத்தை சிறு வயதிலேயே களைய வேண்டும். பொய் சொல்வது தவறு என்பதை உணர்த்தி எப்போதும் உண்மை பேச வேண்டும் என்று கூறி வளர்க்க வேண்டும்.

7 /7

ஒழுக்கமான பழக்கவழக்கங்களை சிறு வயதிலேயே குழந்தைகளு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியமாகும். “நன்றி” கூறுவது, “ப்ளீஸ்” சொல்வது என அனைத்துமே நல்ல பழக்கங்களுக்குள் அடங்கும். பிறரை கணிவுடன் அணுக வேண்டும் எனவும் கற்றுக்கொடுத்தால் அவர்கள் அப்படியே நடந்து கொண்டு, நல்ல மனிதர்களாக உருவாகுவர்.