Ration card | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்யும்போது நீங்கள் செய்யவே கூடாத அடிப்படையான தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
New ration card application | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதால் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 4 வகையான ரேஷன் கார்டுகள் (ration card) இருக்கின்றன. அதாவது, முன்னுரிமை அட்டைகள் (PHH) - சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 2.முன்னுரிமை - அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) - 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 3. முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH) - அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 4. சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S) - அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 5. பொருளில்லா அட்டை (NPHH-NC) - எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
விண்ணப்பிக்கும்போதே தாங்கள் எந்தவகையான ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு தீர்மானிக்கப்படும். விருப்பத்தின் அடிப்படையில் கூட அரிசி, சர்க்கரை வேண்டாம் என பயனாளிகள் தெரிவித்துக் கொள்ள முடியும். ஆனால், அரிசி வேண்டாம், சர்க்கரை வேண்டாம் என விண்ணப்பத்தில் தெரியாமல் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்றால் கூட, புதிய ரேஷன் கார்டு வந்த பிறகு அதனை மற்றொரு வகைக்கு மாற்றுவது கடினமாகும்.
ஏனென்றால் ரேஷன் கார்டு வகையை மாற்றுவதற்கான விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படாது. கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் அடிப்படையில் உங்களின் ரேஷன் கார்டு வகை மாற்றப்படும். எனவே, ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போதே அரிசி வேண்டும், வேண்டாம், சர்க்கரை வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.
ஒருவேளை புதுமண தம்பதிகளாக இருந்தால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, குடும்ப ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தால் உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டதற்கான சான்று இ-சேவை மையம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அதனை வைத்து மட்டுமே புதிய ரேஷன் கார்டுக்கு புதுமண தம்பதிகள் விண்ணப்பிக்க முடியும்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் சரியான முகவரி சான்று, ஆதார் அட்டை, மின்சார எண், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையென்றால் கூட உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும். திருமணச் சான்றிதழ் இணைப்பதும் அவசியம். இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது இந்த ஆவணங்களை எல்லாம் கட்டாயம் கேட்பார்கள்.
நீங்களாகவே வீட்டில் இருந்து விண்ணப்பித்தால் இதனை எல்லாம் மனதில் வைத்து பொறுமையாக விண்ணப்பிக்க வேண்டும். அவசரத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் தவறு செய்துவிட்டீர்கள் என்றால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கே 6 மாதங்கள் ஆகும். அதன்பிறகு நீங்கள் மீண்டும் புதிய விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும். அதனை அதிகாரிகள் பார்த்து கள ஆய்வு செய்து, ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்து புதிய ரேஷன் கார்டு கொடுக்க ஒரு வருடத்துக்கும் மேலாகிவிடும்.
எனவே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது எந்தவகை கார்டு வேண்டும் என்பதில் தொடங்கி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் வைப்பது வரை கவனமாக இருக்க வேண்டும். இதில் கவனக்குறைவாக நீங்கள் செய்யும் தவறு, புதிய ரேஷன் கார்டு பெறுவதில் மேலும், ஒரு சில ஆண்டுகள் காலதாமதமாகிவிடும். இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
அதிகாரிகளின் பரிசீலனைக்கு கூட செல்லாமல் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கின்றன. தைப்பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு புதிய ரேஷன் கார்டு விநியோகம் இருக்கும் என்ற தகவலும் உலா வருகிறது. ஏனென்றால் புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களும் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் என்பதால் விரைவாக ரேஷன் கார்டுகள் கொடுப்பதை தமிழ்நாடு முடக்கி வைத்திருக்கிறது. எனவே ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.