குழந்தைக்கு 7 மாதத்துக்கு பிறகு உணவு பொருள்கள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். அந்தவகையில் சத்துமிகுந்த கேழ்வரகை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்பதை பார்க்கலாம்.
குழந்தைக்கு உணவை தொடங்கும் போது திரவ வகை உணவை தான் முதலில் சேர்ப்போம். திட உணவையும் அதிக மென்மையாக்கி கொடுப்பதுதான் வழக்கம். பெரும்பாலும் குழந்தைக்கு கஞ்சி அல்லது கூழ் வகையறாக்களைத்தான் அதிகம் கொடுப்பது வழக்கம். கேழ்வரகை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் இந்த ராகி பவுடரின் சுவை குழந்தைகளோடு பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதை வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கலாம்.
கேழ்வரகை சுத்தம் செய்து மண், கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். பிறகு ராகி மூழ்கும் அளவு ஊறவைத்து 10 மணி நேரம் கழித்து அந்த நீரை வடித்து வைக்கவும். சுத்தமான வெள்ளைத்துணியில் வடிகட்டிய ராகியை வெள்ளைதுணியில் போட்டு இலேசாக இறுக்கமாக கட்டி விடவும். 3 நாட்களில் முளை கட்டி இருக்கும். முளைகட்டியை கேழ்வரகை அகலமான தட்டில் கொட்டி அதன் ஈரம் போக காயவிடுங்கள். நன்றாக காய்ந்ததும் பவுடர் தயாரிக்கலாம்.
முளைகட்டிய ராகியை வாணலியில் சேர்த்து வறுக்கவும். அதன் வாசனை போகும் வரை வறுத்து சூடு ஆற தட்டில் கொட்டவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு கட்டியில்லாமல் அரைக்கவும். கட்டியில்லாமல் அரைத்து அகலமான தட்டில் கொட்டி அதில் கொகோபவுடர், பால் பவுடர் இரண்டையும் கலந்து கொள்ளவும். பிறகு சிறிது அளவு அதில் நாட்டுசர்க்கரை கலந்துகொள்ளவும்.
இந்த பவுடரை ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பதால் அவ்வபோது தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு கொடுக்கும் போது வெந்ந்ரீலும் கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை கொடுத்தாலே போதுமானது. பயணங்களின் போதும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்து நிறைந்த பவுடர் இது.