கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?

2025இன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரை, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் என பல்வேறு விஷயங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள்களுக்கு நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழு நாளை ஒன்றுக்கூடி முடிவெடுக்கும். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட முன்முடிவுகளை தாக்கல் செய்ய ஆளும் தரப்பும், மக்கள் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகளும் காத்திருக்கின்றனர். 

1 /8

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த அந்த உரையை பேரவையில் சரியாக காலை பத்து மணி அளவில் வாசிக்க தொடங்குவார். அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாகத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார்.

2 /8

மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து உயிரிழந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். நாளைய அலுவல்கள் இத்துடன் நிறைவுப்பெறும். அலுவல் ஆய்வுக் குழு நாளை கூடி இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் வரை நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கும்.   

3 /8

வெள்ளிக்கிழமை வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இது உறுதிசெய்யப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே சட்டப்பேரவில் ஆளுநர் உரை பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், ஆளுநர் நாளை உரையை முழுமையாக வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.  

4 /8

குறிப்பாக எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கை கையில் எடுப்பார்கள். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்கட்சியான அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

5 /8

ஆளும் திமுக தரப்பு பல்வேறு சட்ட முன்முடிவுகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தால் விவாதித்து பேரவையில் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியிருந்தார்.

6 /8

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், இந்த அவசர சட்டத்துக்கு இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது.

7 /8

2019ஆம் ஆண்டு நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இன்றோடு முடிவுக்கு வந்தது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வார்டு மறுவரையறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஊரக உள்ளாட்சிகளை சேர்க்கும் பணிகள் முடிந்த பிறகு நடைபெறும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனவேதான் அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.  

8 /8

இது ஒருபுறம் இருக்க பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கத்தை அறிவிப்பு இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரொக்கத்தொகை அறிவிக்கப்படாமல் அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரேசன் கடைகள் மக்களுக்கு டோக்கனை விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.