கடந்த ஓராண்டில் அதிக கவனம் ஈர்த்த டாப் 5 அமைச்சர்கள்

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்திருக்கும் நிலையில் தமிழக மக்களிடையே கவனம் ஈர்த்த டாப் 5 அமைச்சர்கள் யார்? என பார்க்கலாம்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

1 /5

1. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: திமுக அமைச்சரவையில் அதிகம் பேசப்பட்டவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். திமுக ஆட்சியைப் பிடித்ததும் அமைச்சர்கள் பட்டியலில் யாரெல்லாம் இருப்பார்கள் என பல பெயர்களை சுற்றி யூகங்கள் கிளம்பியபோதும், நிதியமைச்சராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இருப்பார் என்பதை மட்டும் அடித்துக் கூறினார்கள். எதிர்பார்த்தைப்போலவே நிதியமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்தின் முழு நிதி நிலை அறிக்கையையும் அண்மையில் தாக்கல் செய்தார். கடனில் இருக்கும் தமிழகத்தை மீட்க இன்னும் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தப்போகிறார் என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

2 /5

2. மா.சுப்பிரமணியன்: கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது. இதனால் சுகாதாரத்துறை அமைச்சராக யாரை திமுக தலைமை நியமிக்கும்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மருத்துவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையைப் போலவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக களப்பணியாற்றினார்.

3 /5

3. பி.கே. சேகர் பாபு:  இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். மதம் சார்ந்த அரசியல் நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக இருக்கும் சூழலில் மிக முக்கியமான பொறுப்புடன் இந்த துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு நேரடியாக சென்ற அவர், ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் நிலங்களை சட்டரீதியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அரசியல் களத்தில் இருக்கும் சவாலையும் அன்றாடம் எதிர்கொண்டு வருகிறார். 

4 /5

4. வி.செந்தில் பாலாஜி: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார். அதிமுகவில் இருந்து உட்கட்சி பூசலால் அங்கிருந்து வெளியேறி பின்னர் டிடிவி தினகரனுடன் பயணித்து, பின்னர் திமுகவில் ஐக்கியமானார். திமுக அரசின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவர், பவர் கட் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். டெண்டர் விஷயத்தில் பா.ஜ.க அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நிலையில், மக்கள் எதிர்கொண்டு வரும் மின்சார பிரச்சனையையும் தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 

5 /5

5. அன்பில் மகேஷ்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் இவரது துறைக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு முன்மாதிரியான திட்டங்களை வகுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய தமிழகத்தில், பல புதுமையான திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறார். மாணவர்கள் நலனை மேம்படுத்தவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும் பல புரட்சிகரமான திட்டங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.