முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் Google Doodle!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

Last Updated : Jul 30, 2019, 09:07 AM IST
முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் Google Doodle! title=

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

கல்வியாளர், அரசியல்வாதி, மருத்துவ நிபுணர், சீர்திருத்தவாதி என பன்முக திறமை கொண்டவர் முத்துலட்சுமி ரெட்டி. இவர்ஆங்கிலேயர் காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். 

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் நடத்தி வைப்பதை எதிர்த்து பெண் உரிமைக்காக போராடியவர். இவரது 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இதையாட்டி கூகுள் நிறுவனம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் டூடுளை வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

முன்னதாக முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News