நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை; ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஹர்திக் பாண்டியா

எனது முதல் உலகக் கோப்பையில் நாங்கள் விரும்பிய முடிவு இல்லை. இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் அனைவருக்கும் நன்றி, 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2019, 05:50 PM IST
நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை; ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஹர்திக் பாண்டியா title=

புதுடெல்லி: எனது முதல் உலகக் கோப்பையில் நாங்கள் விரும்பிய முடிவு இல்லை. இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் அனைவருக்கும் நன்றி, நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோஸ் டெய்லர் 74(90) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியை காத்திருந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தலா ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் மூன்றாவதாக வந்த விராட் கோலி ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். மூன்று பேரின் மோசமான தொடக்கத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் களம் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காததால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டை இழந்தது. தோனி மற்றும் ஜடேஜா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். கடைசி நிமிடத்தில் ஜடேஜா 77 ரன்கள் எடுத்து அவுட் ஆக, தோனி மீது அனைவரின் நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனதால், இந்தியாவின் வெற்றி பறிபோனது. இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

ஒரு பக்கம் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், கடைசி வரை போராடிய இந்திய வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில், உலகக்கோப்பை தொடரைக் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியது, நினைவுகள்.. "வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள். எனது முதல் உலகக் கோப்பையில் நாங்கள் விரும்பிய முடிவு இல்லை, ஆனால் அது எனக்கு பல உணர்ச்சிகளையும், பாடங்களையும் கற்றுக் கொடுத்தது, நான் அதை எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்ளுவேன். இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் அனைவருக்கும் நன்றி, நாங்கள் நீங்கள் இல்லாமல் ஒன்றுமில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Trending News