பிளஸ் 2 தேர்வுக்கு முன்பே அட்மிஷன்: கொக்கி போடும் பொறியியல் கல்லூரிகள்

இன்னும் பிளஸ் 2 தேர்வு தொடங்கவே இல்லை. இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

Written by - K.Nagappan | Last Updated : Mar 13, 2022, 08:38 AM IST
  • பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஏற்பாடுகள்
  • தெரிந்த தெளிவானவர்களிடம் எல்லாம் ஆலோசனை பெறுங்கள்
  • இப்போதைக்கு தேர்வுகளை அட்டகாசமாய் எழுதட்டும்
பிளஸ் 2 தேர்வுக்கு முன்பே அட்மிஷன்: கொக்கி போடும் பொறியியல் கல்லூரிகள்  title=

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கவுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதத் தயாராகி வருகின்றனர். செய்முறைத் தேர்வுகள் கூட இன்னும் தொடங்கவில்லை. ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இப்போதே பொறியியல் கல்லூரிகள் ஆள் பிடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டன.  இதுகுறித்து கல்வி ஆர்வலர், எழுத்தாளர் விழியன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

''தமிழகம் முழுவதும் 10, மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 2 வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28-ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

இன்னும் +2 தேர்வுகள் ஆரம்பிக்கவும் இல்லை ஆனால் அதற்குள் அட்மிஷன் போடச் சொல்றாங்க காசு கட்டிடலாமா சார் என்று அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இது இப்போது ஒரு வாடிக்கையாகவே மாறியுள்ளது. பொறியியல் கல்லூரிகள் ஆள் பிடிக்கும் வேலை தொடங்கிவிட்டது. இதனை நிர்வாகம் அதில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டும் செய்கின்றார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களை அணுகி எங்க கல்லூரியில் இப்பவே 20,000 ரூபாய் கட்டினால் நீங்க கேட்கும் கோர்ஸ் கன்பார்ம், வீட்டில் இருந்தே வந்து படிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டுகின்றார்கள்.

சில மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வளவு நன்றாகப் படிக்ககூடியவர்கள். உள்ளூர் மக்கள் அட எளிதாக கிடைக்கின்றதே என்று ஏமார்ந்துவிடுகின்றார்கள். அந்தக் கல்லூரிகளில் எல்லாம் மிகக் குறைவான வசதிகளே இருக்கின்றன.

vizhiyan

கூகுளில் கடந்த ஆண்டு நிரப்பப்படாத பொறியில் கல்லூரி சீட்களின் எண்ணிக்கையை மட்டும் பாருங்கள். எத்தனை சதவிகிதம் நிரப்பப்படாமல் இருக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தை பொறியியல் கல்லூரியில்தான் படிக்கவேண்டும் என்றால் 200% சீட் கிடைக்கும். ஆனால் எந்தக் கல்லூரியில், எவ்வளவு வாய்ப்புகள் அதிகம் உள்ள கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்பது உங்கள் கைகளில் உள்ளது. முதலில் தேர்வுகளை எந்த மனத்தடை, பயமின்றி எழுதட்டும். ஒரு பக்கம் +2விற்குப் பின்னர் தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள படிப்புகள் என்னவென்று ஆராயுங்கள். அது தன் கனவுகளுடன் ஒத்துப்போகின்றதா என்றும் பார்க்கவும். பொறியியல் என்று சுருக்கிக்கொள்ள வேண்டாம். அது ஒரு அழகிய ப்ராசஸ். தெரிந்த தெளிவானவர்களிடம் எல்லாம் ஆலோசனை பெறுங்கள். காலம் இருக்கு. பதற்றமே வேண்டாம். மெல்ல செய்வோம். இப்போதைக்கு தேர்வுகளை அட்டகாசமாய் எழுதட்டும்''. 

இவ்வாறு விழியன் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கிலும் இதைப் பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்க | சென்னையில் TNPSC குரூப் 2 இலவசப் பயிற்சி: அம்பேத்கர் கல்வி மையம் அழைப்பு

Trending News