சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சாலைகளில் குவிந்துள்ளனர். அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். கடற்கரை சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னர் காவல்துறையினர் கூறியதாவது:- அமைதியான முறையில் போராடினீர்கள். உங்களுடைய குறிக்கோள் நிறைவேற்று பட்டுள்ளது. எனவே எப்படி அமைதியான முறையில் போராடினீர்களோ, அதே முறையில் கலைந்து செல்லுங்கள். சட்டம் ஒழுங்கை மதித்து இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள். தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களான ராஜசேகர், கார்த்திகேய சிவசேனாதிபதி, அம்பலத்தரசு, ஹிப்காப் ஆதி ஆகியோர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.