விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் அதிரடியாக நீக்கம்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மதிப்பெண் வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உமா உள்பட 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 400 கோடி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட உமாவும் இதனை ஒப்புக்கொண்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியரும் இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் பதிவாளராக இருந்த கணேசனுக்கு தொடர்பு என ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. பதிவாளர் கணேசன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பல்கலைகழகத்தின் பதிவாளர் கணேசனை பொறுப்பில் இருந்து அவரை நீக்கி துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை துணைவேந்தர் நியமித்துள்ளார்.