பிஎஸ்என்எல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jun 12, 2018, 01:07 PM IST
பிஎஸ்என்எல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு! title=

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.

இதனால் அரசுக்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பரில் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதியன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

இந்நிலையில், தற்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில், விசாரணை நீதிமன்றம் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும், வழக்கில் இருந்து விடுவிக்குமாறு 4 பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்த நிலையில், அனைவரையும் விடுவித்தது தவறு என்றும் கூறி உள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப் பட்டுள்ள கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அவர்கள் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Trending News