ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயத்துற்கு பாதிப்பு கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு திட்டத்தை ஜல்லிக்கட்டுக்கென நடந்த ஒரு மெரினா போராட்டத்தை போல் நடத்த திட்டம் என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை குறித்து பெட்ரோலிய துறை இன்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
3200 அடி ஆழத்திற்கும் கீழே இருந்து எரிவாயு எடுப்பதால் மேலேயுள்ள நிலத்தடி நீர்மட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
எரிவாயு திட்டத்திற்கு 1461 சதுர கி.மீ என்ற அளவில், சிறு அளவிலான நிலம்தான் தேவைப்படுகிறது.
700 சிறு கிணறுகள் மூலம் இப்பணி நடக்கும்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிலங்களை 3 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும்.
இத்திட்டத்தால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கெனவே உள்ள எண்ணெய்க் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.