தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க காவிரி ஆணையத்தை உடனே கூட்டுக: வைகோ

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2019, 01:22 PM IST
தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க காவிரி ஆணையத்தை உடனே கூட்டுக: வைகோ title=

சென்னை: தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

அதுக்குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் தலைநகர் சென்னை கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1000 கன அடியிலிருந்து 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு வருவதால், மே 14 ஆம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.61 அடியாக சரிந்துவிட்டது.

மேட்டூரில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணை நீரைப் பயன்படுத்தி காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் சுமார் 16 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையின் 86 ஆண்டு கால வரலாற்றில் 15 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12 இல் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதால், மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கலில், நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, கர்நாடக அணையில் உள்ள காவிரி நீரை கண்காணித்து தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப நீர் திறந்துவிடும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. கர்நாடக அணைகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, தண்ணீர் திறக்கும் சட்டப்படியான அதிகாரம் ஏதுமற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்று முறை மட்டுமே கூடி காவிரி நீர் பங்கீடு குறித்து ஆலோசித்து இருக்கின்றது.

இதிலும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நவீன்குமார் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்தது. அதே போல காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 2018 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்தது.

காவிரி மேலாண்மை ஆணையம் மாதந்தோறும் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதைக் கண்காணிக்க வேண்டும். மேலும் 10 மாத இடைவெளியில் காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதத்திற்கு எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு தொடங்கி, ஐந்தரை மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் காவிரி ஆணையமோ? ஒழுங்காற்றுக் குழுவோ இன்னும் கூட்டப்படவில்லை.

தமிழகம் கடுமையான குடிநீர் பிரச்சினையில் தவித்துக் கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு நீர் இல்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு கோரிக்கை வைக்காதது கண்டனத்துக்கு உரியது.

கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை அம்மாநில அரசு புதிதாக உருவாக்கி இருக்கும் ஏரிகளுக்குத் திருப்பி விட்டு, அணைகளில் நீர் மட்டம் குறைவு என்று காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்ச அளவுகூட காவிரி நீர் கிடைப்பது முயற் கொம்புதான்.

காவிரி டெல்டா குறுவைப் பாசனத்தின் தேவையைக் கருத்தில் கொண்டும், கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி உடனடியாக காவரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Trending News