புதுச்சேரி மாநிலத்தை பொருத்த வரை ஆளுநர் கிரண் பேடி மற்றும் ஆளும் கட்சியினருக்கு இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் வி. நாராயணசாமி கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.
அதேபோல, புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது நேரம் முடிந்துவிட்டது. பேசுவதை நிறுத்துமாறு சொல்லி மைக்கை அணைக்க கவர்னர் சொன்னதால், எம்.எல்.ஏ. கோவப்பட்டு, அப்படி நடந்துக்கொண்டார். பொது இடங்களில் நடக்கும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் தவறாக நடந்து கொண்டதை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக விசாரிக்கப்ட்டு வருகிறது.
அதேபோல கவர்னர் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை பேசக்கூடாது என்று மைக்கை அணைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது. கவர்னர் தொடர்ந்து அதிகார எல்லையை மீறி செயல் படுகிறார். இதுக்குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் புகார் கொடுத்துள்ளோம்.
கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாத கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளோம் எனக் அவர் கூறினார்.