தமிழ்மொழிக்காக “மொய்விருந்து” மூலம் நிதி திரட்டிய வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள்

“மொய்விருந்து” மூலம் 25 லட்சம் நிதி திரட்டிய அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்காக அமையவிருக்கும் தனி இருக்கைக்காக வழங்கிய வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள்.

Last Updated : Jan 18, 2018, 07:06 PM IST
தமிழ்மொழிக்காக “மொய்விருந்து” மூலம் நிதி திரட்டிய வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள் title=

தமிழர் பண்பாடான “மொய்விருந்து” அழைப்பு மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு தனித்தமிழ் இருக்கை அமைப்பதற்கு நிதி திரட்டி உதவிய வெளிநாடு வாழ் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கு பாராட்டு:

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிகளில் வசித்துவரும் தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழர் குடும்பங்கள் ஒன்றினைந்து, தங்கள் பகுதிகளில் வசித்துவரும் தமிழர்களிடையே “மொய்விருந்து அழைப்பு” என்ற நமது தமிழர் பாரம்பரிய, கலாச்சார, “தலைவாழை” விழாவை முன்னெடுத்துச் சென்று $.40,000/- (இந்திய மதிப்பில் சுமார் 25 இலட்சம்) நிதி திரட்டி அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர்தனி செம்மொழியான தமிழ்மொழிக்காக அமையவிருக்கும் தனி இருக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிவாழ் தமிழ் இளைஞர்கள் குழுவானது, நம் தமிழர் பண்பாட்டை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், வளைகுடாப்பகுதியிலுள்ள தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களை நம் தமிழர் பண்பாட்டின்படி வெற்றிலை, பாக்கு மற்றும் தாம்பூலம் வைத்து ஒவ்வொரு வீடாகச் சென்று அழைத்துள்ளனர். இவர்கள் அழைப்பை ஏற்று 600 குடும்பங்கள் மொய்விருந்தில் கலந்து கொண்டனர். 

பங்கேற்றவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை அங்குள்ள 15 உணவகங்கள் ஏற்றுக் கொண்டு சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் 19 வகையான உணவு வகைகளை தலை வாழை விருந்து வைத்து சுமார் 1500 நபர்களுக்கு “மொய்விருந்து” அளிக்கப்பட்டது. இதில் இலாப நோக்கமற்ற சேவை மனப்பான்மை கொண்ட பல குழுக்களும் கலந்து கொண்டுள்ளது.

“மொய்விருந்து விழா” மேடை பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டும், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டும் விழா மேடையைச் சுற்றி டீக்கடை, சுண்டல் கடை, பொறிக்கடை, சாக்லேட் கடைகள் என பல கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. 

விழா முடிவில், மொய்விருந்தில் கலந்து கொண்டு நிதி வழங்கிய அனைவருக்கும் சாத்தூர் காரச்சேவு, திருநெல்வேலி அல்வா மற்றும் கோயம்புத்தூர் சிப்ஸ் ஆகியவை தனித்தனி பைகளில் இட்டு வழங்கி விழா ஒருங்கிணைப்பு குழுவினர் அனுப்பியுள்ளனர்.

நமது தொன்று தொட்ட பண்பாட்டு நிகழ்ச்சியான “மொய்விருந்தை” சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிகளில் பரப்பியதோடு, நம் தமிழ்மொழி வளர்ச்சிக்காக நிதி திரட்டி தன்னார்வத்துடன் ஒருங்கிணைந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை சேர்ந்த தமிழர்களை, தமிழ்நாட்டில் வசிக்கும் அவர்களது உறவுகளாகிய நாம் அனைவரும் வாழ்த்தி, பாராட்டுவோம். 

Trending News