சென்னை: 144 தடையின் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் அலங்காநல்லூரில் தொடங்கினாலும் சென்னை மெரினா கடற்கரையில் அது மையம் கொண்டிருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டு 6 நாட்களாக வரலாறு காணாத போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக் கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
சமூக விரோதிகளும், தேச விரோதிகளும் புகுந்ததால் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் திசை திரும்பியது.
கடந்த 23-ம் தேதி மெரினாவில் இருந்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
அப்போது மெரினா கடற்கரை சாலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும், நகரின் பிற பகுதிகளிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர் களை விரட்டி அடித்தனர். அதன் பிறகு கலவரம் ஓய்ந்தது.
இந்த நிலையில் இளைஞர்கள் மீண்டும் மெரினாவில் ஒன்று கூட உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் உலா வந்தது. போராட்டத்தில் பங்கேற்குமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு தொடர்ந்து அழைப்பும் விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் தரப்பில் மெரினாவில் யாரும் ஒன்று கூட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது மெரினாவில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பதற்காக ஏராளமானோர் கூடுவது வழக்கம். ஆனால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வார விடுமுறை நாளான நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.