தலைநகர் டெல்லியில், ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக தனி இல்லம் அமைப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்திற்கு "தமிழ்நாடு இல்லம்" அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழ்நாடு இல்லத்திற்கு பழைய இல்லத்திற்கு - வைகை இல்லம் என்றும், புதிய இல்லத்திற்கு பொதிகை இல்லம் எனவும் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதனையடுத்து இதற்கு எதிர்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக இல்லத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழைய இல்லத்திற்கு - வைகை தமிழ்நாடு இல்லம் என்றும், புதிய இல்லத்திற்கு பொதிகை தமிழ்நாடு இல்லம் எனவும் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட இயக்கத்தின் சாதனையாக இருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றவே, அழிக்கவோ கூடாது. டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்க தமிழ்நாடு இல்லம் பெயரை மாற்ற முயற்சிப்பது வேதனை.
தமிழ்நாடு என்ற பெறுமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்க அரசு துணிந்துள்ளது கண்டிக்கத்தக்கது. பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லம் என்பதை மாற்றம் செய்ய அரசு துணை போகக்கூடாது. டெல்லியில் கேரளா இல்லம், பீகார் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றியது ஏன்? இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.