குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை; பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

Updated: Oct 28, 2019, 11:32 AM IST
குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை; பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 65 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குழந்தையை மீட்கும் பணி எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மீட்புப் பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனினும் குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது. ஆழ்துளை கிணறு தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும், மழை பெய்தாலும் தொடர்ந்து நடைபெறும். பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

டங்ஸ்டன் கார்பைடு உள்ள எந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது. குழந்தை தொடர்ந்து 88 அடி ஆழத்தில் உள்ளது. தற்போது துளையிட்டு வரும் இடத்தின் கீழே கரிசல் மண் இருக்கக்கூடும் என்பதால் தொடர்ந்து குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. மொத்தம் 98 அடி ஆழத்திற்கு குழி தோண்டபடவுள்ளது. முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரம் ஆகும் என தெரிவித்தார்.