முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்; என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார் என்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனக் கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால் உடனடியாக அதிமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா கூறியதாவது:-
சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன். வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட
அனுமதிக்கவில்லை. என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்னால் இப்போது சுதந்திரமாக செயல்பட முடியும். என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாத காலமாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். எனக்காக காங்கிரஸ், திமுக, பாஜகவினர் குரல் கொடுத்தார்கள்.. அவர்களுக்கு நன்றி. இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
ஒரு ராஜ்யசபா எம்.பி. தம்மை கட்சித் தலைவர் அடித்தார்; ராஜினாமா செய்ய மிரட்டினார் என்பதற்கு மேலே நாயைப் போல அடைத்துவைத்தார்கள் என பகீர் குற்றம்சாட்டியிருக்கிறார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபா எம்.பி.க்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி ஏதேனும் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Sasikala Pushpa, sacked AIADMK MP: I was not allowed to go home, kept in Poes Garden like a dog. I am under threat pic.twitter.com/gpoSAuS6d1
— ANI (@ANI_news) August 1, 2016