புதுடில்லி: காவிரி தொடர்பான வழக்கில் இன்று மாலை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழுவின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கை பிற்பகல் ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று மாலை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறியுள்ளது.