இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்; இல்லையென்றால் அபராதம் -தமிழக அரசு

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், அணியாமல் செல்பவர்களிடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 27, 2018, 11:39 PM IST
இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்; இல்லையென்றால் அபராதம் -தமிழக அரசு
Zee Media

கடந்த ஆறு மாதத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் 40.53 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் மட்டும் நடைபெற்று உள்ளது. எனவே நமது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாம் சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணியுமாறும் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியதாவது:-

தமிழக அரசு சாலை விபத்துகளை குறைப்பதற்காக தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை 2018 வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளது இதில் இரு சக்கர வாகனங்களால் மட்டும் 15,601 விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மொத்த விபத்துக்களில் 40.53 சதவீதம் ஆகும். மேலும் 38,491 விபத்துக்களின்எண்ணிக்கையில் 7,526 நபர்கள் இறந்துள்ளார்கள், இரு சக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,476 ஆகும். (மொத்த விபத்துக்களில் 32.90 சதவீதம்) இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,811 (மொத்த இரு சக்கர வாகன விபத்துக்களில் 73.14 சதவீதம்). போக்குவரத்து துறையில் 2.14 கோடி இரு சக்கர வாகனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன இவை தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாகன எண்ணிக்கையின் 84 சதவீதம் ஆகும்.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்கின்றன இதில் சாலை விபத்துக்கள் என்பது எதிர்பாராமல் ஏற்படுபவை. எனவே இதனை தவிர்ப்பதற்காக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது, மோட்டார் கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது அவசியமான ஒன்றாகும். உயிர் மதிப்புமிக்கது மற்றும் விபத்துக்கள் கணிக்க முடியாத எதிர்பாராத ஒன்று மற்றும் விபத்துக்கள் கன நொடிகளுக்குள் நடைபெற்று விடும். நாம் நம்மை பாதுகாக்கவில்லை என்றால் நாம் நமது உயிரை இழந்து விடுவோம் அல்லது பெருங்காயங்களுக்கு உள்ளாகி விடுவோம். எனவே நமது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாம் சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசமும், காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129ல் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். மாண்புமிகு சென்னை உயர்நீதீமன்றத்தின் உத்தரவில் மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ளபடி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 177ன் படி உரிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

தமிழக அரசு சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மேலும் பொது மக்களிடையே தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியம் குறித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை காவல் துறை, நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து, தங்களது பொன்னான உயிரினை காப்பாற்ற கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.