ஹூண்டாய் நிறுவனத்தின் KONA, தமிழகத்தில் அறிமுகமானது!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்!

Updated: Jul 24, 2019, 01:08 PM IST
ஹூண்டாய் நிறுவனத்தின் KONA, தமிழகத்தில் அறிமுகமானது!
Pic Courtesy: twitter/@MCSampathOffl

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்!

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்சாரக் கார் உற்பத்திக்காக தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில், கோனா என்ற மின்சாரக் காரின் உற்பத்தி தொடங்கியது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான கோனா தற்போது களத்தில் இறங்கியுள்ளது கோனா. இந்தக் காரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

கோனா மின்சாரக் காரின் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அவர், பின்னர் காரில் பயணித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் காரில் பயணம் செய்தார். 

வரிகளுக்கு முந்தைய காரின் ஷோரூம் விலை 25 லட்சம் ரூபாய். ஆன்ரோடு விலை 30 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

39.2 கிலோ வாட் திறன் கொண்ட லித்தியம் அயன் மின்சேமிப்பான், காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ. பயணிக்க முடியும் எனவும், 9.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் முகப்பு விளக்கு அருகே சார்ஜிங் பாயிண்ட் உள்ளது. நார்மல் மற்றும் ஃபாஸ்ட் ஆகிய இரு வழிகளில் மின்னேற்றம் செய்ய முடியும். நார்மல் என்ற பயன்முறையில், முழு மின்னேற்றம் செய்ய 19 மணிநேரம் செலவாகும். ஃபாஸ்ட் பயன்முறையில் 5 முதல் 6 மணி நேரத்திற்குள்ளாக சார்ஜ் செய்து விட முடியும்.

கார் சென்று கொண்டிருக்கும் போது, ஆக்சலரேட்டரில் இருந்து காலை எடுத்து விட்டால், தானாகவே மின்னேற்றமாகும் தொழில்நுட்பமும் கோனாவில் இருப்பதாக ஹூண்டாய் விளக்கம் அளித்துள்ளது. 
வாடிக்கையாளர்களுக்காக, வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், இந்தியன் ஆயில் கார்ப்போரேசனிடம் ஒப்பந்தம் பேசி வருவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஒரு பகுதி கோனா என்று அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள், சாகசப் பிரியர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் என்பதால் அவர்களை கவுரவிக்கும் விதமாகவே கோனா என்று பெயரை இந்த காருக்கு ஹூண்டாய் தேர்ந்தெடுத்துள்ளது.