இலங்கை அதிபர் வேட்பாளராக தமது சகோதரர் கோத்தபயா-வை முன்னாள் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், சிறிசேனாவின் ஆதரவும் ராஜபக்சே அணிக்கே இருப்பதாக கருதப்படுகிறது. உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு வகித்த கோத்தபயா, அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு காரணமானவர் என்ற சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
அதிபர் தேர்தல் வேட்பாளராக கோத்தபயா ராஜபக்ஷவை மகிந்த அறிவித்துள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோத்தாவின் படம் தொங்கவிடப்பட்ட வாகனமொன்று வெடி சத்தங்களுடன் நகரை வலம் வந்த வண்ணம் உள்ளது.
கோத்தபயா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீரா, காட்டுமிராண்டிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்றும், வெள்ளை வேன் வன்முறைக் குற்றங்கள் மறுபடியும் நிகழ அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.