இந்திய நிர்வாகிகளில் 63 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள்: தகவல் அறிக்கை

பணிபுரியும் நிபுணர்களின் உணவு மற்றும் செயல்பாட்டு நிலைகளை மதிப்பாய்வு செய்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது

Last Updated : May 28, 2020, 03:15 PM IST
இந்திய நிர்வாகிகளில் 63 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள்: தகவல் அறிக்கை title=

புதுடெல்லி: உடல்நலம் குறித்த தகவல்களை அளிக்கும் 'ஹெல்திஃபைமி' என்ற  செயலி மூலம் வெளியிடப்பட்ட, கார்ப்பரேட் இந்தியாவின் உடற்தகுதி அளவுகள் குறித்த அறிக்கையில், 63 சதவீத நிர்வாகிகள், 23 க்கும் அதிகமான உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) உடன், அதிக எடை கொண்டவர்களாக உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

12 மாத காலஅளவில் 20-க்கும் அதிகமான நிறுவனங்களின் 60,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களின் உணவு மற்றும் செயல்பாட்டு நிலைகளை மதிப்பாய்வு செய்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. 

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் தொலைதூர இடங்களான ஜகாடியா, கண்டலா மற்றும் வாபி போன்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், விற்பனை வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், வங்கியாளர்கள் மற்றும் பலரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 

செயல்பாட்டு நிலைகளின் முக்கிய குறிகாட்டியான, காலடிகள், அதாவது ஒரு நாளில் ஒருவர் நடக்கும் அளவின் எண்ணிக்கையைப் பார்த்தால், ​ நுகர்வோர் பொருட்கள் துறை முன்னிலையில் உள்ளது. இங்கு ஒரு நாளில் இந்த எண்ணிக்கையின் சராசரி அளவு 5,988 என உள்ளது.

மிகக் குறைந்த அளவானது நிதித் துறையின் நிர்வாகிகளிடம் காணப்படுகிறது. இவர்களது சராசரி எண்ணிக்கை 4,969 ஆக உள்ளது. சில்லறை வியாபாரம், உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பிற துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 5,000 அடிகள் வரை நடக்கிறார்கள்.

தரவுகளின்படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓடுவது மிகவும் பிரபலமான உடற்பயிற்சி முறையாக உள்ளது. ஆண் நிர்வாகிகளிடையே பிரபலமான பிற நடவடிக்கைகள் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி மற்றும் நீச்சல். பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய உட்புற நடவடிக்கைகளை அதிகம் விரும்புகிறார்கள். யோகா மற்றும் பிற வீட்டு உடற்பயிற்சிகளை அதிகம் செய்கிறார்கள்.

வார இறுதி நாட்களில் உடற்பயிற்சிகள் மிகக் குறைவாக செய்யப்படுகின்றன. வார நாட்களில் 300-ஆக இருக்கும் கலோரி எரிக்கப்படும் வீதம், வார இறுதி நாட்களில் சராசரியாக 250 ஆக குறைகிறது.

(மொழியாக்கம்: ஸ்ரீபிரியா சம்பத்குமார்)

Trending News