டெல்லி மெட்ரோ ரயிலில் பயண கட்டண உயர்வுக்கு பின்னர் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக தெரியவந்ததுள்ளது.
கடந்த மே 10-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 இருந்து ரூ.10 உயர்த்தப்பட்டது.
புதிய கட்டண அட்டவணையின்படி, 2 கிமீ வரை ரூ.10, 2-5 கிமீ வரை ரூ.15, 5 முதல் 12 கிமீ வரை ரூ.20, 12 முதல் 21 கிமீ வரை ரூ.30, 21 முதல் 32 கிமீ வரை ரூ.40, 32 கிமீ-க்கு மேல் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் ரூ.60 ஆக உயர்த்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
எனவே மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலுமே கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மெட்ரோ ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு 10% கட்டண தள்ளுபடி அளிக்கப்படும் என்று மெட்ரோ அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பாலும் பெரிய அளவில் பயன் இல்லை என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்தது.
இதுதொடர்பாக, மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் எண்ணிக்கை 5% வரை குறைவது இயற்கையானதுதான். பள்ளிகள் விடுமுறை, சீதோஷண நிலை, வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றனர்.