புதுடெல்லி: மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க மொத்தம் ரூ.340 கோடி பரிசு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் செயலி மற்றும் பேடிஎம் போன்ற மின்னணு பண பரிமாற்ற வழிமுறைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில், மின்னணு முறையில் பணம் செலுத்துவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரொக்க பரிசு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திட்ட கமிஷனுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
LIVE: #LuckyGrahakYojana and #DigiDhanVyapariYojana - Christmas gifts for the nation: CEO, @NITIAayog https://t.co/exWKYyKgC6 pic.twitter.com/iH0cSrBfPU
— PIB India (@PIB_India) December 15, 2016
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, மின்னணு முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் பணம் செலுத்துவது 95 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்காக ‘லக்கி கிரஹாக் யோஜனா’, வியாபாரிகளுக்காக ‘டிஜி–தன் வியாபாரி யோஜனா’ என்ற 2 பரிசு திட்டங்களை தொடங்குகிறோம்.
சிறிய அளவிலான பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம் என்பதால், ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான தொகைக்கு நடைபெறும் பண பரிமாற்றம் மட்டும் பரிசுக்கு பரிசீலிக்கப்படும்.
பொதுமக்களுக்கான ‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டப்படி, வருகிற 25-ம் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு நாள்தோறும் 15000 பேருக்கு தலா ரூ.1,000 பரிசு வழங்கப்படும். அதுபோல், வாரந்தோறும், 7000 பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பரிசு வழங்கப்படும்.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்த வாராந்திர பரிசு வழங்கப்படும்.
இந்த இரு திட்டங்களுக்கும் மொத்தம் ரூ.340 கோடி செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.