ஷாஹீன் பாக் போல நாட்டில் 5,000 இடங்களில் போராட்டம் நடக்கும்: பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்

அடுத்த 10 நாட்களில் ஷாஹீன் பாக் போன்று, 5,000 இடங்களில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 23, 2020, 02:36 AM IST
ஷாஹீன் பாக் போல நாட்டில் 5,000 இடங்களில் போராட்டம் நடக்கும்: பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்
Pic Courtesy : ANI

புது டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இந்த அத்தியாயத்தில், பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் நேற்று (புதன்கிழமை), மத்திய அரசை கண்டித்து CAA மற்றும் NRC க்கு எதிராக தெற்கு டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டார். அங்கு சென்ற அவர், மத்திய அரசை குறிவைத்து தாக்கி பேசினார். அடுத்த 10 நாட்களில் ஷாஹீன் பாக் போன்று, 5,000 இடங்களில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

ஷாஹீன் பாக் கூட்டத்தில் உரையாற்றிய சந்திரசேகர், "குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஒரு "கறுப்புச் சட்டம்". இது மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இது ஒரு அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அரசியலமைப்பையும் நாட்டின் ஒற்றுமையையும் நாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

கடும்பனியில் போராடும் பெண்கள்: 
உறைபனி குளிர் கூட இந்த பெண்களின் போராட்ட குணத்தை உடைக்க முடிய வில்லை என்று ஆசாத் கூறினார். அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் குறைந்தது 5,000 ஷாஹீன் பாக்ஸ் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.

பின்வாங்க மாட்டோம் - மத்திய அரசு:
இந்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் கடுமையான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் இந்தச் சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனவரி 10 முதல் அமல்:
பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் (Citizenship Amendment Act) நாட்டில் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது என்று அரசிதழ் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 11 அன்று குடியுரிமை திருத்தம் சட்டம் பாராளுமன்றத்தால் (Parliament) நிறைவேற்றப்பட்டது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.