கடந்த வாரம் கார்கி கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார விழாவின் போது மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் கார்கி கல்லூரி என்ற மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் நடந்த அன்று தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கல்லூரி மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது. 11 க்கும் மேற்பட்ட காவல்துறை குழுக்கள் வழக்கின் அனைத்து அம்சங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்படுகிறார்கள் மற்றும் சந்தேக படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கல்லூரி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை பிப்ரவரி 10 ம் தேதி வழக்கு பதிவு செய்தது. ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 452, 354, 509, 34 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் கார்கி கல்லூரி தலையாசிரியர் ப்ரொமிளா குமார் கூறியுள்ளார்.