இன்று முதல் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். டெல்லி பெண்களுக்கு சலுகை வழங்கிய ஆம் ஆத்மி அரசு.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Oct 29, 2019, 11:33 AM IST
இன்று முதல் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்
Pic Courtesy : @AamAadmiParty

புதுடில்லி: தேசிய தலைநகரில் தங்களுக்கு பஸ் பயணங்களை இலவசமாக வழங்க டெல்லி அரசு எடுத்த முடிவை பெண்கள் பாராட்டி உள்ளனர். டெல்லி போக்குவரத்துக் கழகம் (Delhi Transport Corporation) பேருந்து மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் (Cluster Buses) பெண்களுக்கு பயணத்தை இலவசமாக்குவதற்கான அறிவிப்புகளை டெல்லி அரசாங்கம் ஏற்கவே வெளியிட்டுள்ளது. இன்று முதல் (அக்டோபர் 29) அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். டெல்லியில் பஸ் சேவைகள் வழியாக பயணிக்க விரும்பும் பெண்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

திருவிழாவில் இலவச பேருந்து சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறுகையில்; “டெல்லியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பஸ் மார்ஷல்கள் நாளை முதல் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்படும். இதற்காக 13,000 பஸ் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் மாநில சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முடிவு, பலரையும் மகிழ்ச்சயடைய செய்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, தேசிய தலைநகரில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. போக்குவரத்துத் துறைக்கு 479 கோடி ரூபாய் கூடுதல் மானியம் வழங்கவும் டெல்லி சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு 140 கோடி மானியமும், டெல்லி மெட்ரோவில் இலவச பயணத்திற்கு 150 கோடியும் மானியமாக சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், மெட்ரோவில் இலவச பயணத்திற்கான ஒப்புதல் தாமதமாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை ஆம் ஆத்மி அரசு வழங்கியுள்ளது.