பட்ஜெட் அறிவிப்பின்போது ரூ.3 லட்சம் என அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணப் பரிமாற்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்பு கரன்சி தடை நடவடிக்கைக்குப்பின் வங்கியில் இருந்து ரொக்கம் எடுத்தல், ரொக்கப் பரிவர்த்தனை போன்றவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரொக்கப் பணப் பயன்பாட்டை குறைக்கும் விதித்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.3 லட்சமாக இருக்கும் என அறிவித்தார். இந்த விதிமுறையை மீறினால் அதே அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிதி மசோதா, கம்பெனிகள் சட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம், கடத்தல் மற்றும் அன்னிய செலாவணி சட்டம், டிராய் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 40 சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தீர்ப்பாயங்கள் திறம்பட பணியாற்றவும், சிறு தீர்ப்பாயங்களை ஒன்றாக இணைத்து அதன் எண்ணிக்கையை 40லிருந்து 12 ஆக குறைக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. நிதி மசோதாவில் செய்யப்பட்ட திருத்தத்தில், ரொக்கப் பண பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ரூ.2 லட்சம் என்ற பணப் பரிமாற்ற உச்சவரம்பு விதிமுறை மீறினால் அதே அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.