விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்...
உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக இந்தியா வளர்ந்து வருவது உறுதி என்று விண்வெளித் துறையின் செயலாளரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவருமான கே.சிவன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவர் இன்று ஒரு மெய்நிகர் உரையின் போது கூறுகையில், இந்தியாவில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா விண்வெளித் துறையில் தனியார் மயத்தின் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் காணொளி மூலம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்.. பலகாலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சமூக - பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக விண்வெளித்துறையின் சேவைகள் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கும் சீர்திருத்தத்தை அடைய, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதும், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் பங்களிப்பும், பல முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் நிலைநிறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா விண்வெளிச் செயல்பாடுகளில் தனியாா் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீா்திருத்தங்களுக்கும், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
READ | ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு... அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு..!
மேலும், இந்த சீர்திருத்தங்களின் வாய்ப்புகள் குறித்து இஸ்ரோ மிகவும் உற்சாகமாக உள்ளது, இது நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தில் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொடுக்க அனுமதிக்கும் என்று சிவன் கூறினார். "உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக இந்தியா வளர்ந்து வருவது உறுதி," என்று அவர் கூறினார். இந்த சீர்திருத்தங்களுக்கு நன்றி, தொழில்நுட்ப துறையில் நாட்டில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் மூலமாக இந்திய விண்வெளிக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியாா் அமைப்புகளுக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சுயச்சாா்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், தொழில்துறையின் அடிப்படையை விரிவுபடுத்துவதற்கும் இந்தியா விண்வெளித்துறை ஊக்கமளிப்பதாக செயல்படும். விண்வெளி உடைமைகள், தரவுகள், வசதிகள் ஆகியவற்றை அணுகுவது உள்பட அனைத்து செயல்பாடுகளும் அவற்றின் சமூக-பொருளாதார பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு, இந்தச் சீா்திருத்தங்கள் உதவும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேற்று தெரிவித்திருந்தார்.