நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க கோரிய பெண் வழக்கறிஞரை, அதே குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் காட்டம்!!
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியை, சோனியா காந்தி மன்னித்தது போன்று, நிர்பயா வழக்கிலும் அவரது தாயார் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என அண்மையில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க கோரிய பெண் வழக்கறிஞரை, அதே குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் 2012 ஆம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால், 2 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த முகாமில் இருந்த பிறகு விடுதலை செய்யப்பட்டான். மற்றொருவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு நீதிமன்றம் மற்றும் டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி என அடுத்தடுத்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும், வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதஉரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாககக் கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
#WATCH Kangana Ranaut on senior lawyer Indira Jaising's statement,'Nirbhaya's mother should forgive the convicts': That lady (Jaising) should be kept in jail with those convicts for four days...Women like them give birth to these kind of monsters and murderers. (22.1) pic.twitter.com/MtNcAca1QG
— ANI (@ANI) January 23, 2020
இவரின் இந்த கோரிக்கை பலரின் கோபத்திற்க்கு ஆளானது. இவரின் கருத்துக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, ``மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். இந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.
இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது” எனக் காட்டமாகப் பேசியுள்ளார். மேலும், இதுபோன்ற பெண்கள்தான் அரக்கர்களையும், கொலைகாரர்களையும் உருவாக்குகிறார்கள் என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக தெரிவித்துள்ளார்.