சபரிமலை விவகாரம்; புது சட்டம் கோரும் மாநில அரசு?...

சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது!

Last Updated : Jun 20, 2019, 08:58 AM IST
சபரிமலை விவகாரம்; புது சட்டம் கோரும் மாநில அரசு?... title=

சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசு முடிவு செய்தது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கோவில் வளாகத்தில் கைகலப்பு, தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேறின. அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையே, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்தார். இம்மசோதா, இந்த வாரம் விவாதத்துக்கு வருகிறது.

இந்த சூழ்நிலையில், பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கேரள தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவிக்கையில்., "சபரிமலை விவகாரம், தனிநபர் மசோதாவாக மத்திய அரசின் முன்பு இருக்கிறது. தனிநபர் மசோதாக்களின் கதி என்னவாகும் என்று அனைவருக்கும் தெரியும்.

அத்தகைய சூழலில் எழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். பாஜக-வுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும். மாநில பாஜக தலைமையும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News